Tirumazhisaiyazhwar
திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சித்தார்த்தி ஆண்டு, தைத்திங்கள், மக நட்சத்திரத்தில் திருமாலின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக, சென்னைக்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ள திருமழிசை என்னும் தலத்தில் பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் மகனாக அவதரித்தார். அவர் பிறந்தபோது கை, கால் முதலிய அங்கங்கள் இல்லாமல் பிண்டமாக அவதரித்தார். எனவே, மிகவும் வருத்தமுற்ற அவர்கள் அப்பிண்டத்தை ஓர் பிரம்பு புதரில் விட்டுச் சென்றனர்.

இறைவனுடைய திருக்கருணையால் அப்பிண்டம் ஓர் அழகிய ஆண் குழந்தையாக மாறியது. அங்கு பிரம்பு அறுக்க வந்த பிரம்புத் தொழிலாளி அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று வளர்த்து வந்தார். அவர் இளமையில் சைவம், பௌத்தம், சமணம் முதலிய பல சமயங்களின் சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்து இறுதியில் சைவ சமயத்தின்மேல் பற்றுக் கொண்டு சிவவாக்கியர் என்ற பெயருடன் அம்மதத்தை தழுவலானார். ஒருநாள் இவர் திருமயிலைக்குத் தலயாத்திரை சென்றபோது, அங்கிருந்த பேயாழ்வார் இவரை ஆட்கொண்டு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து திருமழிசை ஆழ்வார் என்று பெயர் சூட்டி வைணவ நெறியைப் பரப்பும்படி பணித்தார்.

இவ்வாறிருக்கையில், சிவபெருமான் உமாதேவியுடன் தோன்றி வரம் கேட்கும்படி சொல்ல, ஊசியின் பின்னே நூல்வரும்படி செய்யும் வரம் வேண்டி இகழ்ச்சியுடன் கூறினார். இதனால் சிவபெருமான் கோபம் கொண்டு தமது நெற்றிக்கண்ணை திறக்க, ஆழ்வார் திருமால் அருளால் தமது வலதுகால் கட்டை விரலில் ஒரு கண்ணைத் திறந்து காட்டினார். ஆழ்வாரின் திருமால் பக்தியை வியந்த சிவபெருமான் அவருக்கு "பக்திசாரர்" என்ற திருநாமமிட்டு அருளினார்.

பின்னர், திருமழிசை ஆழ்வார் தமது சீடன் கணிகண்ணனுடன் காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகாவை அடைந்து அங்கேயே வாழ்ந்து வந்தார். அவரது பெருமைகளைக் கேள்விபட்ட அவ்வூர் மன்னன் பல்லவராயன் கணிகண்ணனிடம் தமக்கு இளமை திரும்பப் பாடும்படி கேட்க, மானிடம் பாடேன் என்று மறுத்துவிட்டார். மன்னன் சினம் கொண்டு அவரை தன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டான். இதை அறிந்த திருமழிசை ஆழ்வார் தானும் நகரை விட்டுப் போவதாகவும், பெருமாளையும் தன்னுடன் நகரை விட்டு வரும்படி பிரார்த்தனை செய்ய, பெருமாளும் அவருடன் கிளம்பி வந்து விட்டார். மூவரும் சென்றவுடன் நகரம் இருளில் மூழ்கி பொலிவிழந்து விட்டது. மன்னன் தன் தவறை உணர்ந்து அவர் திருவடிகளில் வணங்கி மன்னிக்க வேண்டினான். ஆழ்வார் மீண்டும் திருவெஃகா தலத்துக்கே பெருமாளுடன் திரும்பி, முன்பு போல திருமாலை பள்ளிக் கொள்ளுமாறு வேண்டினார். ஆழ்வார் சொன்னபடி செய்ததால் பெருமாளுக்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்ற பெயர் ஏற்பட்டது.

திருமழிசை ஆழ்வார் "நான்முகன் திருவந்தாதி" என்ற 96 பாசுரங்களும், "திருச்சந்த விருத்தம்" என்ற 120 பாசுரங்களுமாக மொத்தம் 216 பாசுரங்கள் அருளியுள்ளார். திருமழிசைப்பிரான் திருக்குடந்தையில் பரமபதம் அடைந்தார்.

நான்முகன் திருவந்தாதி திருச்சந்த விருத்தம்

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.